கோம்பாவிலில் 200 குடும்பங்கள் 7 ஆம் திகதி மீள்குடியேற்றம்
* 6 மாதத்தில் 100 வீத மீள்குடியேற்றம்
* தலா ரூ 2,85000 பெறுமதியான வீடுகள்
வவுனியா, செட்டிக்குளம் நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள 200 குடும்பங்கள் எதிர்வரும் 7 ஆம் திகதி புதுக்குடியிருப்பு, கோம்பாவிலில் மீளக்குடியமர்த்தப் படவுள்ளனர். இங்கு 3 கிராம சேவகர் பிரிவுகளில் இவர்கள் குடியமர்த்தப்படுவார்கள். இவர்களுக்கு தலா ரூ. 2,85,000 பெறுமதியான 200 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ன வீரக்கோன் தெரிவித்தார்.
இம்மக்களை மீளக் குடியமர்த்துவதற்காக 600 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளதுடன் படையினரின் ஒத்துழைப்புடன் காடுகள் அழிக்கப்பட்டு மக்கள் வாழக்கூடிய இடமாக மாற்றப்பட்டுள்ளதாக கூறினார்.
ஒவ்வொரு வீட்டுக்கும் பின்புறமாக தனியான மலசலகூட வசதியும் 120சதுர அடி கொண்ட அறைகளுமாக வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
எதிர்வரும் 7 ஆம் திகதி மீள்குடியேறும் 200 குடும்பங்களுக்கும் 20 கிலோ சிகப்பு நாட்டரிசி உட்பட 3500 ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகளும், மண்வெட்டி, ஹரிக்கன் லாம்புகள், செய்கை பண்ணுவதற்கான விதை வகைகள், உர வகைகள், படுக்கைகள் உட்பட அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்படும் எனவும் அமைச்சர் குணரட்ண வீரக்கோன் தெரிவித்தார்.
ஆறு மாதங்களில் மீள்குடியேற்றம் பூர்த்தி
கடந்த டிசம்பர் 31 ஆம் திகதியுடன் நிவாரணக் கிராமங்களிலுள்ள அனைவரையும் மீள் குடியேற்ற திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட திடீர் மழை, வெள்ளம் காரணமாகவும், மிதிவெடிகள், நிலக்கண்ணி வெடிகள் அகற்றுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகவும் இன்றும் 1965 குடும்பங்களைச் சேர்ந்த 6556 பேர் இன்னமும் முகாம்களில் உள்ளனர்.
இன்னும் 6 மாதத்தில் வடக்கிலும் கிழக்கிலும் இடமபெயர்ந்துள்ள அனைவரும் மீள்குடியேற்றப்பட்டுவிடுவார்கள். மீள்குடியேற்றப்பட்டுள்ளவர்கள் அனைவரும் 100 வீதம் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட்டுவிட்டார்கள் என சொல்வதற்கில்லை.
யுத்தம் முடிவடைந்த பின்னர் இடம்பெயர்ந்துள்ள மக்களை முகாமுக்குள் முடக்கி வைத்திருக்காமல் சுதந்திரமாக வெளியே வாழ வேண்டும் என்ற நோக்குடன் மீள்குடியேற்றம் செய்யப்பட்டன என்றும் அமைச்சர் குணரட்ண வீரக்கோன் தெரிவித்தார்.
மீள்குடியேற்ற அமைச்சருடன் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் அமைச்சின் செயலாளர் டபிள்யூ. எம். பந்துசேன ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பொலிஸ் அதிகாரம் வழங்கப்படுவதால் தமிழர்களுக்கு என்ன இலாபம்?
சகலருக்கும் சம உரிமை கிடைக்க வேண்டும் என்பதே என் நோக்கம் -- பிரதியமைச்சர் முரளிதரன் நாட்டிலுள்ள சகல மக்களுக்கும் சம உரிமை இருக்க வேண்டும். குறிப்பாக வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து பகுதிகளிலுமுள்ள தமிழ் மக்களுக்கு தேவையான உரிமைகளை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
இதுவே எனது நோக்கம். இதனை இலக்காகக் கொண்டே நான் செயற்படுகிறேன் என மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் எனக்கும் இடையில் எதுவித விரிசல்களும் இல்லை. பொலிஸ் அதிகாரம் வழங்கப்படுவதால் தமிழருக்கு என்ன இலாபம்? என்றுதான் கேட்கிறேன்.
காணி அதிகாரம் இப்போது இல்லை என்று சொல்லி விட முடியாது. ஒவ்வொரு மாகாணத்திலுள்ள ஒவ்வொரு மாவட்ட செயலாளரின் கட்டுப்பாட்டின் கீழ்தான் காணிகள் உள்ளன.
முதலமைச்சர் என்பவர் இந்த மாவட்ட செயலாளர்களுடன் இணைந்து செயற்பட்டாலேயே அதனை பெற்றுவிட முடியும். மாவட்ட செயலாளரின் அனுமதி இன்றி காணிகளை எவரும் பெற்றுவிட முடியாது.
நான் முதலமைச்சர் சந்திரகாந்தினை அச்சுறுத்தவில்லை. முதலமைச்சர் பொதுசன ஐக்கிய முன்னணியில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஒருவர்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தல்கள் முடிவடைந்த பின்னர் முதலமைச்சராக ஒரு முஸ்லிம்தான் நியமிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதிக்கு பல அழுத்தங்கள் கொடுத்த போதும் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக ஒரு தமிழர் நியமிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் ஜனாதிபதி செயற்பட்டார்.
பொலிஸ் அதிகாரம் என கேட்பதைவிட ஒவ்வொரு மாகாணத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர்களுடன் முதலமைச்சர்கள் இணைந்து செயற்பட்டாலே போதுமானது.
அத்துடன், பொலிஸ் அதிகாரம், காணி அதிகாரம் என கேட்பதைவிட அரசுடன் இணைந்து செயற்பட்டு மேலும் ஒத்துழைப்புகளையும் தமிழ் மக்களுக்கான உரிமைகளையும் பெற்றுக் கொள்ள முடியும். இதனையே வலியுறுத்தினேன் என பிரதி அமைச்சர் முரளிதரன் தெரிவித்தார்.
மீள்குடியேற்ற அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதியமைச்சர் முரளிதரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு கரந்தெனிய பிரதேச செயலகத்தில் நேற்று (09) இடம் பெற்றது. இந்நிகழ்வில் பிரதமாதிதியாக கலந்து கொண்ட மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரகோன் மாணவர்களுக்கு புலமைப் பரிசில் உதவித் தொகையை வழங்குவதையும் அருகில் கரந்தெனிய பிரதேச செயலாளர் திருமதி தமரா குமாரி டீ சில்வா நிற்பதையும் படத்தில் காணலாம். 10-01-2012
பார்வையற்றோர் சம்மேளனத்திற்கு பிரதியமைச்சர் முரளிதரன் விஜயம் மட்டக்களப்பு மாவட்டத்தின் தேசிய பார்வையற்றோர் சம்மேளனத்திற்கு மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நேற்று வியாழக்கிழமை விஜயம் செய்தார். இதன்போது, 5 இலட்சம் ரூபா நிதியினை இந்நிறுவனத்திற்கு பிரதியமைச்சர் வழங்கி வைத்தார். நன்றி: தமிழ் மிரர் 06 ஜனவரி 2012
தற்காலிக முகாமில் தங்கியிருந்த மக்கள் இன்று மீள்குடியேற்றம்
வவுனியா செட்டிக்குளம் நலன்புரி முகாமில் தற்காலிகமாக தங்கியிருந்த ஒரு தொகுதி மக்கள் இன்று மீள்குடியேற்றப்படவுள்ளனர்.
இவர்கள் முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இன்று மீள்குடியேற்றப்படவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன் தெரிவித்தார்.
இதன்படி செட்டிக்குளம் நலன்புரி முகாமில் தற்காலிகமாக தங்கியிருந்த 21 குடும்பங்களைச் சேர்ந்த 57 பேர் மீள்குடியேற்றப்படவுள்ளனர்.
அத்துடன் மீள்குடியேற்றப்படும் மக்களுக்கு தேவையான அடிப்படை உதவிகள் செய்து கொடுக்கப்படவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன் குறிப்பிட்டார்.
இதேவேளை, குறித்த பகுதியில் கடந்த 27 ஆண்டுகளுக்கு பின்னர் மக்கள் மீள்குடியேற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி eprlfnet.com09/01/2012
மீள்குடியேற்ற அமைச்சின் புதிய செயலாளராக டபிள்யூ.எம்.பந்துசேன ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (2012.01.02) அமைச்சில் தனது உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்பதை படத்தில் காணலாம். அருகில் அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம்.நயிமுதீன் சிரேஷ்ட உதவிச் செயலாளர் திருமதி தவேஸ்வரி ஆகியோரும் காணப்படுகின்றனர்.
மீள்குடியேற்ற மக்களுக்கான தேவைகளை பெற்றுக்கொடுக்க 6 உயர்மட்ட குழுக்கள்
வடமாகாணத்தில் மீள்குடியேறியுள்ள மக்களின் தேவைகைளை பெற்றுக்கொடுப்பதற்கான திட்டங்களை தயாரிக்கவென 6 உயர் மட்டக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், கைத்தொழில் வணிகத்துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன், வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி ஆகியோரது தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி செயலணியின் செயலாளர், மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, அரசாங்க அதிபர்கள் மற்றும் வடமாகாண அமைச்சுக்களின் செயலளார்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் பிரதிநிதிகள் உட்பட பலரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
1990ஆம் ஆண்டுக்கு முன்னர், வடக்கிலிருந்து இடம்பெயர்க்கப்பட்ட மக்கள் மீள்குடியேறுவதில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் தற்போது மீள்குடியேறியுள்ள மக்களின் தேவைப்பாடுகள் அதற்கான நடைமுறை செயற்பாட்டு திட்டங்கள் குறித்து இந்த கூட்டத்தின் போது கலந்துரையாடப்பட்டதுடன் 6 உயர்மட்டக் குழுக்களும் இங்கு நியமிக்கப்பட்டன.
வடமாகாண பிரதம செயலாளர் தலைமையில் இரு குழுக்களும் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்களை கொண்ட 4 குழுக்களும் இங்கு ஏற்படுத்தப்பட்டன. விவசாயம், கல்வி, சுகாதாரம், காணி வீதி, கூட்டுறவு, மீன்பிடி சம்பந்தமாக தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்காக வேண்டிய தமது ஆலோசனைகளையும் செயற்றிட்டங்களையும் இக்குழு சமர்பிக்க வேண்டும் என இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
இக்குழுவில் அங்கம் வகிக்கும் துறைசாரந்த உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து ஜனவரி மாதம் 19ஆம் திகதிக்கு முன்னர் தமது அறிக்கையினை சமர்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நன்றி: Tamil Mirror.lk
மட்டக்களப்பின் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஜப்பானியத் தூதுவருடன் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் கலந்துரையாடல்
மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தித்திட்டங்கள் குறித்து ஜப்பானியத் தூதுவர் நொபுகிரோ கோபோவுடன் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் உப தலைவரும் மீள்குடியேற்றப் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பிலுள்ள அவரது அமைச்சு அலுவலகத்தில் சந்தித்து உரையாடினார்.
இச்சந்திப்பின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியில் நடைபெற்றுவரும் வேலைத்திட்டங்கள் குறித்தும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
முக்கியமாக நீண்டகாலமாக கிரான், தொப்பிக்கல, தரவை உள்ளிட்ட பிரதேசங்களில் விவசாயத்தில் ஈடுபடும், அப்பிரதேசங்களில் வசித்துவரும் மக்களின் முக்கிய பிரச்சினையாக உள்ள கிரான் பாலம் தொடர்பில் மீள்குடியேற்ற பிரதி அமைச்சரினால் வேண்டுகோள் ஒன்று முன்வைக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் இப்பாலத்தினை மிக விரைவாக அமைத்துத்தருவதற்கான நடவடிக்கைகளைத் தான் எடுக்கவுள்ளதாக ஜப்பானியத் தூதுவர் அமைச்சரிடம் உறுதியளித்துள்ளார்.
இக் கிரான் பாலம் நிரந்தரமாக அமைக்கப்படுவதனால் மழைக்காலங்களில் பெரும் சிரமங்களை அனுபவித்து வருகின்ற மக்களும், விவசாயிகளும் பெரும் நன்மையடைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: battinews.com
24 வருடங்களின் பின் யாழ். இடைக்காடு, வளலாய் பகுதிகளில் மீள்குடியேற்றம்
யாழில் 24 வருடங்களின் பின்னர் கோப்பாய் பிரதேச பிரிவுக்குட்பட்ட இடைக்காடு, வளலாய் பகுதிகளில் நவம்வர் 29ஆம் திகதி மக்கள் மீள்குடியேற்றப்படவுள்ளனர் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமல்ட சுகுமார் இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரதேசத்தில் மக்களை மீள்குடியமர்த்துவதற்கு இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
127 குடும்பங்கள் வளலாய் கிராமசேவகர் பிரிவிலும், 262 குடும்பங்கள் இடைக்காடு கிராமசேவகர் பிரிவிலும் மீள்குடியேற்றப்படவுள்ளனர்.
இந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மீள் குடியமர்வதற்கான தமது பதிவுகளை கோப்பாய் பிரதேச செயலகத்தில் மேற்கொள்ளுமாறும், மீளக்குடியமர்வதற்கு ஏற்கனவே விண்ணப்பித்தவர்களும், தமது பதிவுகளை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் யாழ்.அரச அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கள் இந்தப் பதிவுகளை இன்று (23.11.2011) முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (27.11.2011) வரை மேற்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
Courtesy: www.adaderana.lk/ 23, 11,2011
தேசத் தலைவருக்கு மக்கள் வாழ்த்து
ஜனாதிபதியின் பதவியேற்பு தினம், பிறந்த நாளையிட்டு நாடெங்கிலும் விசேட வைபவங்கள்
--லோரன்ஸ் செல்வநாயகம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் 66வது பிறந்த தினம் இன்றாகும். அதேவேளை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இரண்டாவது தடவையாகப் பதவியேற்று ஓராண்டு நிறைவுதின வைபவம் நாளையாகும். இதனையொட்டிய பல்வேறு நிகழ்வுகள் இன்று நாடளாவிய ரீதியில் நடைபெறுகின்றன.
பயங்கரவாதத்தை ஒழித்து முழு உலகிற்கும் முன்னுதாரணமாகத் திகழும் தலைவர் என்ற வகையில் உலகத் தலைவர்களும் நாட்டு மக்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் சமய வழிபாடுகள், கலாசார நிகழ்ச்சிகள், தானம் வழங்கும் வைபவங்கள் ஜனாதிபதிக்கும் நாட்டிற்கும் ஆசீர் வேண்டி விசேட பூஜைகளும் இன்று நடைபெறுகின்றன.
இன்று காலை களனி விஹாரையில் விசேட மத வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வழிபாடுகளில் கலந்துகொள்ளவுள்ளார். அதனையடுத்து முற்பகல் 10.00 மணிக்கு அலரி மாளிகையில் நவம்பர் 18 ஆம் திகதியில் பிறந்த பிள்ளைகள் ஆயிரம் பேருக்கு அன்பளிப்புகள் வழங்கப்படவுள்ளன. இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிள்ளைகளுக்கு அன்பளிப்புகளை வழங்குவார்.
இன்று மாலை கொழும்பு கோட்டை யிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் சமய வழிபாடுகள் இடம்பெறுவதுடன் நாட்டின் பல பதிகளிலும் சமய வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
நாளை 19 ஆம் திகதி கொழும்பு கங்காராம விஹாரையிலிருந்து அலங்கார ஊர்வலமாக பெளத்த மதத் தேரர்கள் அலரி மாளிகைக்கு அழைத்து வரப்பட்டு அங்கு சமய வழிபாடு கள் நடத்த ஏற்பாடு செய்யப்படவுள்ளன.
ஜனாதிபதியின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்றைய தினம் கொழும்பு நாரஹேன்பிட்டி அபயராம விஹாரையில் ஆயிரம் தாய்மாருக்கு தானம் வழங்கும் வைபவங்கள் இடம்பெற்றன. அத்துடன் நேற்றுப் பிற்பகல் நாடளாவிய 66 பாடசாலை மாணவர்களுக்கு கணனிகளும் கல்வி உபகரணங்களும் அன்பளிப்புச் செய்யப்பட்டன.
இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கலந்து கொண்டார். இதேவேளை, இன்றும் நாளையும் நாட்டின் சர்வ மத வழிபாட்டுத் தலங்களிலும் விசேட வழிபாடுகள் நடைபெறவுள்ளன.
அனுராதபுரம் மகாபோதி, கண்டி தலதா மாளிகை, களனி மகா விஹாரை, பெல்லன்வில ரஜ மகா விகாரை, களுத்துறை மற்றும் மாத்தறை மகா போதி, திஸ்ஸ மஹாராம ராஜ மகா விஹாரை, மஹியங்கன ரஜமஹா விகாரை வவுனியா சுதர்மாராம, மட்டக்களப்பு மங்களாராமய ஆகிய விஹாரைகளிலும் சமய வழிபாடுகள் இடம்பெறவுள்ளன.
இதேவேளை, மன்னார் திருக்கேதீஸ்வரம், திருகோணமலை கோணேஸ்வரம், சிலாபம் முன்னேஸ்வரம், யாழ்ப்பாணம் நகுலேஸ்வரம் மாவிட்டபுரம் தேவஸ்தானங்களிலும் இந்து மதவழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற வுள்ளன. அத்துடன் கொழும்பில் ஸ்ரீமயூராபதி தேவஸ்தானம், காலிமுகத்திடல் கிறிஸ்து நாதா ஆலயம், தெவட்டகஹ பள்ளிவாசலிலும் சமய வழிபாடுகள் ஒழுங்கு செய்யப்பட்டு ள்ளன.
நேற்று முன்தினம் 11 இலட்சம் மரக் கன்றுகளை நடும் தேசிய வைபவம் ஜனாதிபதியினால் பாராளுமன்றத்துக்கு அருகாமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அத்துடன், கதிர்காமம் கிரிவெஹெர ரஜமகா விஹாரையில் நிர்மாணிக்கப்படும் நூதனசாலைக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் மேற்கொள்ளப் பட்டது.
அதன் பின்னர் கிரிவெஹெர விஹாரையில் இடம்பெற்ற சமய வழிபாட்டு நிகழ்வுகளிலும் ஜனாதிபதி அவர்கள் கலந்து கொண்டார். 30 வருட கால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டிற்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாட்டில் எந்தப் பகுதிக்கும் எவரும் எந்நேரத்திலும் சென்று வரக்கூடிய சூழ்நிலையை அவர் உருவாக்கியுள்ளார் என ஜனாதிபதியை அவரது பிறந்த நாளில் வாழ்த்தும் நாட்டு மக்கள் அவர் நீடூழி வாழவேண்டும் எனத் தனிப்பட்ட ரீதியிலும் வழிபாடுகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நன்றி: தினகரன் 18-11-2011 படங்கள்: colombopage
மீள் குடியேற்றத்துக்கு 1336 மில். ஒதுக்கீடு !
மீள் குடியேற்ற நடவடிக்கைகளை பூர்த்தி செய்வதற்காக அதன் இறுதிக் கட்டத்துக்கு 1336 மில்லியன் ரூபாவை ஒதுக்க அமைச்சரவை இணக்கம் கண்டுள்ளது.
2009ஆம் ஆண்டு இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கையின் போது உள்ளுரில் இடம்பெயர்ந்வர்களுள் 97 வீதமானவர்கள் மீள் குடியேற்றப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள அனைவரையும் மீள் குடியேற்றி முடிப்பதற்கு 1336 மில்லியன் ஒதுக்கப்படுகின்றது.
மீள் குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரகோனின் ஆலோசனைக்கு ஏற்ப இதற்கான அமைச்சரவை தீமானத்தை எடுத்துள்ளது. மீள் குடியேற்றப்படும் குடும்பங்களுக்கு பொது குடி நீர் வசதி நிரந்தரக் கழிவரை வசதியுடனான வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட உள்ளன. இதன் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில் 1672 குடும்பங்களும் திருகோணமலை மூதூர் பகுதியில் 1272 குடும்பங்களும் எஞ்சிய 166 குடும்பங்களும் மன்னாரிலும் மீள் குடியேற்றப்பட உள்ளனர். நன்றி: news.lk 18-11-2011
முல்லைத்தீவு இரணைப்பாலையில் மேலும் ஒரு தொகுதியினர் மீள்குடியேற்றம்.
வவுனியா நலன்புரி முகாம்களிலுள்ள இரணைப்பாலைக் கிராமத்தைச் சேர்ந்த மக்களில் ஒரு தொகுதியினர் ஞாயிற்றுக்கிழமை (20.11.2011) மீள் குடியேற்றம் செய்யப்படவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.பத்திநாதன் தெரிவித்துள்ளார்.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவிலுள்ள இரணைப்பாலைக் கிராமத்தில் 128 குடும்பங்களைச் சேர்ந்த 396 பேர் இவ்வாறு மீள் குடியமர்த்தப்பட உள்ளனர். மீள் குடியேற்றப்படவுள்ள குடும்பங்களுக்கு ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் உணவு தவிர்ந்த அத்தியாவசிப் பொருட்களும், முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தினால் குடும்பம் ஒன்றிற்கு 25ஆயிரம் ரூபா பணமும் வழங்கப்படவுள்ளதாகவும், இந்த மக்களுக்கான கொடுப்பனவுகளை மீள் குடியேற்றம் செய்யப்படும் நாளுக்கு அடுத்த நாள் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அரச அதிபர் குறிப்பிட்டார்.
நலன்புரி நிலையத்தில் இருக்கும் மக்களை வவுனியாவில் இருந்து கிராமத்திற்கு அழைத்து வருவதற்கு இடம்பெயர்ந்தோருக்கான சர்வதேச சம்மேளனம் முன்வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 5 பிரதேச செயலகர் பிரிவுகளிலும், 28 795 குடும்பங்களைச் சேர்ந்த 91 066 பேர் மீள்குடியமர்த்தப் பட்டுள்ளதாகவும், ஞாயிற்றுக்கிழமை இரணைப்பாலையில் மீள்குடியமர்த்தப்படவுள்ள குடும்பங்களையும் சேர்த்து 29 913 குடும்பங்களைச் சேர்ந்த 91 462 பேர் மீள் குடியமர்த்தப்பட்டு உள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் தெரிவித்தார்.
நன்றி: thesamnet 17/11/11
தேசிய மர நடுகைத் திட்டம் ஜனாதிபதியால் ஆரம்பம்!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 65 ஆவது பிறந்த தினத்தையும் இரண்டாவது பதிவியேற்பு நிகழ்வையும் முன்னிட்டு ஜனாதிபதியின் தலைமையில் பத்தரமுல்ல பூங்காவில் தேசிய மர நடுகைத் திட்டம் இன்று காலை ஆரமப்பித்துவைக்கப்பட்டது.
சுற்றாடல் அமைச்சு ஏற்பாடு செய்துள்ள தேசத்துக்கு நிழல் (தெயட்ட செவன) தேசிய மர நடுகை திட்டத்தின்மூலம் இன்று நாடு முழுவதும் 11 இலட்சம் மரக்கன்றுகள் நடப்படும். பத்தரமுல்ல ஜப்பான் நட்புறவு வீதிக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவை ஜனாதிபதி இன்று காலை திறந்துவைத்து அங்கு மரக்கன்று ஒன்றையும் நட்டினார்.
இந்த வைபவத்தில் சுற்றாடல் பாதுகாப்பு அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் முக்கிய அமைச்சர்களும் வெளிநாட்டுத் தூதுவர்களும் கலந்துகொண்டனர். பாடசாலை மாணவர்களும் மரக் கன்றுகளை பூங்காவில் நட்டினர். இந்தத் திட்டத்தின் கீழ் சகல அமைச்சுகள்- திணைக்களங்கள்- கூட்டுத்தாபனங்கள்- சபைகள்- மாகாண சபைகள்- மாவட்ட பிரதேச செயலகங்கள்- தனியார் நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பவற்றின் பங்களிப்புடன் நாடு முழுவதிலும் 29 இலட்சத்து 2851 மரக் கன்றுகள் நடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் நவம்பர் 15 ஆம் திகதி தேசிய மர நடுகைத் திட்டத்தை அமுல்படுத்த அமைச்சரவை தீர் மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி: http://tamil.news.lk/ 15 /11 /2011
கிரானில் புதிய இலங்கை வங்கிக்கிளை அங்குரார்ப்பணம்.
கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேச த்தில் புதிய இலங்கை வங்கிக்கிளை அமைச்சர்களினால் அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், மீள்குடியேற்ற பிரதிஅமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், கிரான் பிரதேச செயலாளர் தவராஜா, மற்றும் வங்கியின் முக்கியஸ்த்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
நன்றி: www.unmaikal.com 07.11.2011
மன்னார் பியர் பகுதி சம்பவம் குறித்து எனக்கு அறிவிக்கப்படவில்லை : அமைச்சர் வீரக்கோன் ---ரொபட் அன்டனி மன்னார் பியர் பகுதியில் மீளக்குடியேற முடியாதவாறு 600 குடும்பங்கள் நிர்க்கதியான நிலையில் இருப்பதாக என்னுடைய அவதானத்துக்கு எவரும் கொண்டுவரவில்லை. எனினும் இவ்வாறு கூறப்படுவது தொடர்பில் நான் ஆராய்ந்து பார்க்கின்றேன் என்று மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ன வீரக்கோன் தெரிவித்தார்.
புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழ்கின்ற முஸ்லிம் குடும்பங்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்காக வீடுகளை அமைக்க முற்பட்டபோது தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் உரிய தரப்பினருடன் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அபிவிருத்தியில் காணப்படுகின்ற குறைகள் தாமதங்கள் தீர்க்கப்படும் -- ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்.
அபிவிருத்தியிலும் மீள்குடியேற்ற செயற்பாடுகளிலும் காணப்படுகின்ற குறைபாடுகள் தாமதங்கள் எல்லாம் நிரந்தரமானவை அல்ல அவை தீர்க்கப்பட்டு நிலைமை வழமைக்கு கொண்டு வரப்படும் என ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்று (13) யாழ் மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் மீள்குடியேறிய ஆழியவளைச் சேர்ந்த 40 கடற்றொழிலாளர்களுக்கு மீள்குடியேற்ற அமைச்சின் உதவியுடன் ஒவ்வொன்றும் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான கட்டுமரம் வலைகள் உள்ளிட்ட கடற்றொழில் உபகரணங்களை வழங்கி வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் அடுத்த வருடம் அரசு கடற்றொழிலையும் கரையோர பிரதேசங்களையும் விசேட கவனம் செலுத்தி அபிவிருத்தி செய்ய இருக்கின்றது. அதனை விட வட பகுதியில் பத்து பிரதேச செயலக பிரிவுகளை தெரிவுசெய்து உட்கட்டுமான வசதிகள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் அபிவிருத்தி செய்யவுள்ளது.
எனவே அபிவிருத்திப் பணிகளையும் மக்களின் பிரச்சினைகளையும் ஒரு குறுகிய காலத்தில் ஒரே தடவையில் தீர்த்து விட முடியாது. அவை படிப்படியாக தீர்க்கப்படும். கடந்த காலத்தோடு தற்போதைய நிலைமையினை ஒப்பிட்டுப் பார்த்தால் அபிவிருத்தியின் படிப்படியான முன்னேற்றங்கள் நன்கு புலப்படும் எனத் தெரிவித்த சந்திரகுமார் அவர்கள் மக்களின் குறைகளை மட்டும் கூறிக்கொண்டு அரசியல் இலாபம் தேடுபவர்கள் நாம் அல்ல மாறாக மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான வழிகளை தேடுபவர்களே நாம் எனவும் தெரிவித்தார். பிரதேச செயலர் திருலிங்கநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் பசநாயக்க உதவிச் செயலாளர் நிகரில்காந் கடற்றொழில் நீரியல்வள திணைக்கள உதவிப்பணிப்பாளர் இரவீந்திரன் திணைக்கள பரிசோதகர் கலிஸ்ரன் கிராம சேவையாளர் அம்பிகைபாகன் பருத்தித்துறை பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவரும் ஈ.பி.டி.பி.யின் வடமராட்சி அமைப்பாளருமான சிறீரங்கேஸ்வரன் ஆழியவளை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க தலைவர் தங்கத்துரை மற்றும் கடற்றொழிலாளர்கள் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். நன்றி: http://www.epdpnews.com 13/11/2011
மகிந்த சிந்தனையினால் நாடு பாரிய அபிவிருத்தி கண்டுள்ளது -- பிரதியமைச்சர் முரளிதரன் புகழாரம்
ஒரு தேசியக் கட்சியில் நாங்கள் பயணிப்பது தான் சிறந்த விடயம். இனங்களையோ மதங்களையோ பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் கட்சியிலே நாங்கள் இருந்தோமானால் மீண்டும் குரோதங்களும் பிரச்சினைகளும் உருவாக்கப்பட்டு எங்களுக்குள் பிளவுகள் ஏற்படத்தான் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக மீள் குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். திவிநெகும ஒருங்கிணைப்பு கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ், சமுர்த்தி அதிகாரிகளை உள்ளீர்க்கும் திட்டத்தின் விழிப்புணர்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித் துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், எமது நாட்டில் மூன்று கட்ட ங்களாக பிரித்து இந்த அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மகிந்த சிந்தனைத் திட்டத்தினூடாக கட்டுமானங்கள் மேற்கொள்ளுதல், வாழ்வாதாரங்களை சமனாக கொண்டு செல்லல் அடுத்ததாக மக்களின் பாதுகாப்பு. பாதுகாப்பையும் மக்களின் ஒழுக்கப் பாட்டையும் அதே வேளையில், அதே சமனாக கொண்டு செல்லல். இந்தத்திட்டத்தின் அடிப் படையில் தான் அபிவிருத்தி பிரித்து எங்களுடைய இலங்கை திருநாடு பாரிய அபிவிருத்தியை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.
இலங்கை வரலாற்றில் ஒரு அரசாங்கமும் செய்யாதது. வீதிகள், பாலங்கள் அமைக்கும் பணியை இலங்கையில் எந்தவொரு ஜனாதிப தியும் மேற்கெள்ளவில்லை. இன்று மட்டக்களப்பும் திருகோணம லையும் இணைக்கப்பட்டிருக்கிறது. 5 பெரிய பாலங்கள் நினைத்து க்கூட பார்க்க முடியாது. அதே போன்று தான் அடுத்த கட்டமான பாடசாலைக்கட்டடங்கள். பாடசாலை அபிவிருத்திகள் ஆயிரம் பாடசாலைத்திட்டம் அதிலே 14 பாடசாலைகள் உள்வாங்கப்பட்டு 6 கோடி ரூபா ஒரு பாடசாலைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு தேசியக் கட்சியில் போகும் பொழுது எமது உரிமைகளும் பாதுகாக்கப்படும். வளமும் வந்து கொண்டிருக்கும். மக்களிடையே ஒற்றுமையும் புரிந் துணர்வும் ஏற்படும். நாம் போராடியிருக்கிறோம். இதற்குக் காரணம் அரசியல்வாதிகள் தான். அன்றிருந்த அரசியல்வாதிகள் இரண்டு பக்கமும் துவேசங்கள் பேசினார்கள்.
தமிழ் அரசியல்வாதிகளும் பேசினார்கள். சிங்கள அரசியல்வாதிகளும் பேசினார்கள். அதனால் பாரிய விரிசலும் குரோதமும் வந்தது. பேசிய அரசியல்வாதிகளெல்லாம் வெளிநாட்டுக்கு ஓடிவிட்டார்கள். நாங்கள் ஆளுக்காள் அடிபட்டு கிட்டத்தட்ட 90 ஆயிரம் பேர் இறந்திருக்கி றோம். ஓடிய அரசியல் வாதிகளெல்லாம் இப்போது வந்து விட்டார் கள். ஏனென்றால் இப்போது அமைதி வந்துவிட்டது. நாட்டில் எந்த வொரு பிரச்சினையுமில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.எங் களுக்கென்று ஒரு தனித்துவத்தை, அரசியலை கொண்டு வர வேண் டும். இன்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வெளி உலகத்தில் போய் தமிழருக்காக குரல் கொடுக்கிறார்கள் என்றார்.
நன்றி: வலம்புரி 2011-11-11
இந்தியாவிலிருந்து 49 அகதிகள் இன்று இலங்கை வருகை --லக்ஷ்மி பரசுராமன்
இந்தியாவிலிருந்து 49 இலங்கை அகதிகள் நாளை வர்த்தக கப்பலொன்றின் மூலம் இலங்கையை வந்தடையவுள்ளதாக யு.என்.எச்.சீ. ஆர். இன் உயரதிகாரியான ஃபராட்டி தினகரனுக்குத் தெரிவித்தார்.
தூத்துக்குடியிலிருந்து இன்று மாலை 6 மணிக்கு புறப்படும் இக்கப்பல் நாளை புதன்கிழமை காலை 8 மணியளவில் கொழும்பு துறைமுகத்தை வந்தடையுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவின் தமிழ் நாட்டில் பல்வேறு பாகங்களிலும் தற்காலிகமாக தங்கியிருந்த 12 குடும்பங்களைச் சேர்ந்த 49 இலங்கை அகதிகளே இவ்வாறு இன்று இந்தியாவிலிருந்து கொழும்பு நோக்கி புறப்படுகின்றனர்.
தூத்துக்குடி, மண்டபம், விருதுநகர் மற்றும் வேறு சில இடங்களிலும் வசித்து வந்த தமிழ் அகதிகளே இரண்டாம் கட்டமாக இலங்கைக்கு அழைத்து வரப்படுவதாகவும் யு.என்.எச்.சீ.ஆர். அதிகாரி கூறினார். இவர்கள் வடக்கின் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளையும் கிழக்கில் திருகோணமலையை சேர்ந்தவர்களென்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஏற்கனவே முதலாம் கட்டமாக ஒக்டோபர் 12ம் திகதி 37 இலங்கை அகதிகள் வர்த்தக கப்பலொன்றின் மூலம் கொழும்பு அழைத்து வரப்பட்டனர். இதனையடுத்து இன்றே இலங்கை அகதிகளுடன் அடுத்த கப்பல் புறப்படுகின்ற போதிலும் அதற்கிடையில் பலர் தமது சொந்த விருப்பின் பேரில் இலங்கை வந்திருப்பதாகவும் ஃபராட்டி கூறினார்.
இந்தியாவிலிருந்து இன்று இலங்கை நோக்கிப் புறப்படுபவர்களில் பெரும்பாலானோர் 2006ம் ஆண்டில் அகதிகளாக இந்தியா சென்றவர்கள் ஆவர். மேலும் சிலர் 1990ம் ஆண்டு முதல் இந்தியாவில் வசித்து வருபவர்கள்.
யு.என்.எச்.சீ.ஆர். இன் தரவுகளின்படி 2009 ம் ஆண்டு 800 அகதிகள் இலங்கைத் திரும்பினர். 2010ல் 2054 பேரும் 2011 செப்டம்பர் வரை 1,448 பேரும் இலங்கைத் திரும்பியுள்ளனர். இவர்கள் அகதிகளுக்கு உதவும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் விமான மார்க்கமாக இலங்கை வந்துள்ளனர். தூத்துக்குடியிலிருந்து கொழும்புக்கு கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டதையடுத்து பலர் தமது உடமைகளுடன் சொந்த நாட்டுக்கு திரும்ப விரும்பியுள்ளனர். பயணி ஒருவருக்கு ஆகக் கூடியது 150 கிலோகிராம் நிறை கொண்ட பொருட்களை இதன்போது எடுத்துவரக் கூடியதாகவுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் சமாதானம் நிலைநாட்டப்பட்டதன் பின்னர் யு.என்.எச்.சீ. ஆர். அமைப்பு அப்பகுதிக்குச் சொந்தமானவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளிலேயே கூடுதல் கவனம் செலுத்தியிருந்தது. இருப்பினும் தற்போது வடக்கில் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, கண்ணிவெடியகற்றல்ஆகியன நடைபெற்று வருவதையிட்டு இலங்கை அகதிகளும் தமது சொந்த நாட்டிற்கு திரும்புவதில் கூடுதல் ஆர்வம் காட்டி வருகின்றனரெனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பு நோக்கி புறப்படுகின்றனர்.
தூத்துக்குடி, மண்டபம், விருதுநகர் மற்றும் வேறு சில இடங்களிலும் வசித்து வந்த தமிழ் அகதிகளே இரண்டாம் கட்டமாக இலங்கைக்கு அழைத்து வரப்படுவதாகவும் யு.என்.எச்.சீ.ஆர். அதிகாரி கூறினார். இவர்கள் வடக்கின் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளையும் கிழக்கில் திருகோண மலையை சேர்ந்தவர்களென்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஏற்கனவே முதலாம் கட்டமாக ஒக்டோபர் 12ம் திகதி 37 இலங்கை அகதிகள் வர்த்தக கப்பலொன்றின் மூலம் கொழும்பு அழைத்து வரப்பட்டனர். இதனையடுத்து இன்றே இலங்கை அகதிகளுடன் அடுத்த கப்பல் புறப்படுகின்ற போதிலும் அதற் கிடையில் பலர் தமது சொந்த விருப்பின் பேரில் இலங்கை வந்திருப்பதாகவும் ஃபராட்டி கூறினார்.
இந்தியாவிலிருந்து இன்று இலங்கை நோக்கிப் புறப்படுபவர்களில் பெரும் பாலானோர் 2006ம் ஆண்டில் அகதிகளாக இந்தியா சென்றவர்கள் ஆவர். மேலும் சிலர் 1990ம் ஆண்டு முதல் இந்தியாவில் வசித்து வருபவர்கள்.
யு.என்.எச்.சீ.ஆர். இன் தரவுகளின்படி 2009 ம் ஆண்டு 800 அகதிகள் இலங்கைத் திரும்பினர். 2010ல் 2054 பேரும் 2011 செப்டம்பர் வரை 1,448 பேரும் இலங்கைத் திரும்பி யுள்ளனர். இவர்கள் அகதிகளுக்கு உதவும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங் களின் ஒத்துழைப்புடன் விமான மார்க்கமாக இலங்கை வந்துள்ளனர். தூத்துக்குடியிலிருந்து கொழும்புக்கு கப்பல் சேவை ஆரம்பிக் கப்பட்டதையடுத்து பலர் தமது உடமை களுடன் சொந்த நாட்டுக்கு திரும்ப விரும்பியுள்ளனர். பயணி ஒருவருக்கு ஆகக் கூடியது 150 கிலோகிராம் நிறை கொண்ட பொருட்களை இதன்போது எடுத்துவரக் கூடியதாகவுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் சமாதானம் நிலைநாட்டப்பட்டதன் பின்னர் யு.என்.எச்.சீ. ஆர். அமைப்பு அப்பகுதிக்குச் சொந்தமான வர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளிலேயே கூடுதல் கவனம் செலுத்தியிருந்தது. இருப்பினும் தற்போது வடக்கில் மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, கண்ணிவெடி யகற்றல்ஆகியன நடைபெற்று வருவதை யிட்டு இலங்கை அகதிகளும் தமது சொந்த நாட்டிற்கு திரும்புவதில் கூடுதல் ஆர்வம் காட்டி வருகின்றனரெனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
நன்றி: தினகரன்: 08-நவம்பர்-2011
மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் தீபாவளி வாழ்த்துச் செய்தி இலங்கைத் தீவில் பல திசை வாழ் தமிழ் இன மக்கள் மூன்று தசாப்தங்களாக பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து பல துயரங்களை அனுபவித்து ஈராண்டுகளுக்கு முன் ஜனாதிபதி அவர்களின் சிறந்த தலைமைத்துவத்தின் கீழ் அத்துன்ப துயரங்களில் இருந்து மீட்சி பெற்று தற்போது சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழக் கிடைத்திருப்பதையிட்டு முதலில் கடவுளுக்கும் அடுத்து ஜனாதிபதிக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள வேண்டும். முப்பது ஆண்டுகளாக இருள் சூழ்ந்த யுத்தத்தின் கொடூரத்திலிருந்து மீட்சி பெற்று நாம் தற்போது ஒளிமயமான ஒரு காலகட்டத்தை அடைந்துள்ளோம். எமக்கு உதயமாகியுள்ள ஒளிமயமான தீபாவளித் திருநாளாம் இந்நாள் இந்துக்களாகிய எமக்கு சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் கொண்டாடுவதற்கு கிடைத்திருப்பது நாம் பெற்ற விமோசனமாகும். இத்தீபாவளித் திருநாளில் பொதிந்து கிடக்கும் ஆன்மிக வழிபாட்டுத் தன்மைகளை முன்மாதிரியாகக் கொண்டு குதூகலமாகக் கொண்டாடுமாறு நான் உங்களை மனமார வேண்டிக் கொள்கிறேன். இன்று உதயமாகும் தீபாவளித் திருநாள் உங்கள் அனைவருக்கும் சமாதானமும் சந்தோசமும் நிறைந்த ஒளிமயமான நன்னாளாகத் திகழட்டும் என நான் வாழ்த்துகிறேன். .
நன்றி http://www.virakesari.lk/ 10/26/2011
|